Pages

Friday, 28 February 2014

எங்கெங்கு காணினும் என்.ஜி.ஓ..! பகீர் பின்னணியும் அதிர்ச்சி அரசியலும்


'இந்தத் தொழில் அதிபர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா...’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வாரே... அப்படி சமீப காலமாக ஒருவித அயர்ச்சியை உண்டாக்குகின்றன 'என்.ஜி.ஓ.’ (NGO-Non Governmental Organization) என்று அழைக்கப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்!
தமிழ்நாட்டில் எந்த நகரத்துக்கு, எந்தக் கிராமத்துக்குச் சென்றாலும் இவர்களே நிறைந்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல், மனித உரிமை, குழந்தைகள் நலன், எய்ட்ஸ், கல்வி... என சகல துறைகளிலும் என்.ஜி.ஓ-க்களின் ஆதிக்கமே. இவர்கள் செய்துவரும் 'தொண்டுக்கு’ இந்நேரம் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும்

ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடப்பது என்னவோ, மக்களின் அவலங்களை புராஜெக்ட்களாக மாற்றி துட்டு பார்ப்பதும், அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புகளை மழுங்கடிப்பதும்தான்.
இந்தப் பின்னணியில் என்.ஜி.ஓ-க்களின் மற்றொரு பரிமாணத்தை உரக்கப் பேசுகிறார் எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா.முருகவேள்.

''இந்த ஃபண்டிங் ஏஜென்சிகள் யார்? அவர்கள் ஏன் என்.ஜி.ஓ-க்களுக்கு நிதி கொடுக்கிறார்கள்?''
''இந்திய என்.ஜி.ஓ-க்களுக்கு நிதி அளிப்பதில் அமெரிக்கா முதல் இடத்திலும், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இவர்கள் நிதி அளிக்கின்றனர். அரசுகளும், அந்த நாடுகளின் நிறுவனங்களும் நிதி தருகின்றன. ஏன் தருகிறார்கள் என்றால், சுற்றிவளைத்து பன்னாட்டு நிறுவனங்களின் நலன் விளைவதற்காகத்தான்.
உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் எய்ட்ஸ் விழிப்பு உணர்வு என்பது முழுக்க முழுக்க என்.ஜி.ஓ-க்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எய்ட்ஸ் நோயாளி ஒருவர் உடனே இறந்துவிட்டால், அதற்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு என்ன லாபம்? ஆகவே, அவரை உயிரோடு வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
அதேபோல, இன்று சூரிய மின்சாரம் உள்ளிட்ட மாற்று எரிசக்தி குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. இந்தத் துறையில் தமிழ்நாட்டில் நிறைய என்.ஜி.ஓ-க்கள் செயல்படுவதையும், ஜெர்மனியில் ஏராளமான மாற்று எரிசக்தி நிறுவனங்கள் செயல்படுவதையும் கவனத்தில் கொண்டு இதைப் புரிந்துகொள்ள வேண்டும்!''
''நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், ஊருக்குள் நல்ல காரியங்கள் மேற்கொள்ளவும் யார் பணம் கொடுத்தால் என்ன... நல்ல நோக்கத்துக்குப் பயன்பட்டால் சரிதானே?''
''இல்லை... இது மிகத் தவறான பார்வை. பெரும்பாலான மக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள்.
''எனில், நல்ல என்.ஜி.ஓ. என ஒன்று இருக்கவே முடியாதா?''
''இதுவரை நாம் பேசியது வெளிநாட்டு நிதிபெறும் என்.ஜி.ஓ-க்களைப் பற்றி. அப்படி நிதிபெறும் யாரையும் சந்தேகிக்கத்தான் வேண்டும். ஆனால், நம் ஊரில் நான்கைந்து பேர் சேர்ந்து, ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைப்பது, ஆதரவற்றோருக்கு உணவு அளிப்பது போன்ற சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
ஏராளமானோர் இப்படி தங்கள் சொந்தக் காசைச் செலவழித்து சிறிய என்.ஜி.ஓ-க்களை நடத்துகின்றனர். நாம் இவர்களை அங்கீகரித்து ஆதரவளிக்க வேண்டும். உண்மையிலேயே இவர்கள் செய்வதுதான் தொண்டு. வெளிநாட்டு நிதி பெறும் என்.ஜி.ஓ-க்களை 'தொண்டு நிறுவனங்கள்’ என்றே அழைக்கக் கூடாது. அவர்கள் அனைவரும் மாதச் சம்பளம் பெறுகின்றனர். கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். எல்லாம் செய்துவிட்டு சமூக சேவகர்களாக உலா வருவதைத்தான் சகிக்க முடியவில்லை!''
என்.ஜி.ஓ.  சில தகவல்கள்...
2010-11ம் ஆண்டில் அதிக வெளிநாட்டு நிதி பெற்றிருப்பது டெல்லி (2,016 கோடி ரூபாய்). இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு (1,557 கோடி ரூபாய்). மாவட்டரீதியாகக் கணக்கிட்டால், இந்தியாவிலேயே என்.ஜி.ஓ-க்கள் மூலம் அதிகம் நிதி பெறுவதில் முதல் இடத்தில் இருப்பது சென்னை. 2009-10ம் ஆண்டுக் கணக்கின்படி சென்னை என்.ஜி.ஓ-க்கள் பெற்ற தொகை 871 கோடி ரூபாய்.
என்.ஜி.ஓ-க்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு எஃப்.சி.ஆர்.ஏ. (FCRA - Foreign Contribution Regulation Act) உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை இந்தியாவில் 40,000-த்துக்கும் அதிகமான என்.ஜி.ஓ-க்கள் பெற்றுள்ளன. ஆனால், இதில் பாதி பேர்தான் ஒவ்வோர் ஆண்டும் உள்துறையிடம் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். இப்படி அறிக்கை அளிக்காத 17,700 என்.ஜி.ஓ-க்களின் எஃப்.சி.ஆர்.ஏ. உரிமங்களை, கடந்த 2011-2012ம் ஆண்டில் ரத்துசெய்து உத்தரவிட்டது மத்திய உள்துறை.
ஒரு என்.ஜி.ஓ., வெளிநாட்டு நிதி பெற வேண்டுமெனில், எஃப்.சி.ஆர்.ஏ. பெற்று, குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இதனால், எஃப்.சி.ஆர்.ஏ. எண் பெற்று மூன்று ஆண்டுகள் ஆன என்.ஜி.ஓ-க்களை விற்பது ஒரு தொழிலாகவே உருவெடுத்துள்ளது!
''நிதி பெறுவதில் தவறு இல்லை!''
ஹென்றி டிபேன், மக்கள் கண்காணிப்பகம்.
''மக்களின் துன்பங்களை என்.ஜி.ஓ-க்கள் புராஜெக்ட்களாக மாற்றுவதாகச் சொல்கிறார்களே?''
''இதில் உண்மை இல்லாமல் இல்லை. அரசுசாரா அமைப்புகளுக்கு நிதி உதவி செய்யும் தனி நபர்கள், அமைப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், வெளிநாட்டு நிதி உதவியைச் சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. அதைப் பெறுவதற்கு புராஜெக்ட் ரிப்போர்ட் தயாரிப்பதும், நிதி பெறுவதும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால், ஒரு பிரச்னையின் மீது உணர்வு இல்லாமல் வெறுமனே புராஜெக்டாக அணுகும்போதுதான் சிக்கல் வருகிறது!''
''மேற்கத்திய நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான அரசியல் மற்றும் வியாபாரச் சூழலை உருவாக்க என்.ஜி.ஓ-க்களைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுக் குறித்து...''
''நிதி கொடுப்பவர்கள் யார் என்பதைப் பொறுத்துதான் இதை முடிவு செய்ய முடியும். உலக வங்கி, வெவ்வேறு நாடுகள், தனிப்பட்ட நபர்கள் என பலரும்
நிதி தருகின்றனர். அப்படி நிதி தரும் அனைவருக்குமே ஒரு நோக்கம் இருக்கிறது. உதாரணமாக, தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று கருதும் நாடுகள் இதற்கு நிதி தருகின்றன. மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்கு சில நாடுகள் நிதி தருகின்றன. இப்படி அல்லாமல் வேறு தீய நோக்கங்களும் இருக்கலாம். அதைச் சம்பந்தப்பட்ட என்.ஜி.ஓ-க்கள்தான் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்!''


Courtesy News :
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=92345